தேர்வு கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

மதுரை, செப். 26: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது, தேர்வுக்கட்டணம் ரூ.65லிருந்து ரூ.78 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 98 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் ரூ.78 லிருந்து ரூ.110 ஆக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு கடந்த மாதம் சென்ட் மற்றும் கன்வீனர் கமிட்டியிடம் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர், தேர்வு கட்டண உயர்வை கண்டித்தும், கல்லூரி வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்வு கட்டணத்தை குறைக்க கோரி, அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களுடன், கல்லூரி முதல்வர் (பொ) ஜார்ஜ், தல்லாகுளம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். மூன்று மணிநேரம் நடந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: