மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க விரைவில் இறுதி ஆய்வு பணி

மதுரை, செப். 26:  மதுரை அரசு மருத்துவக்கல்லூரில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான இடங்களை 150-லிருந்து 250 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூறு இடங்களை அதிகரிக்க தேவையான வகுப்பறை, விடுதி வசதி, லேப், நூலக வசதி, மருத்துவமனையில் உள்ள பயிற்சி அறைகள் ஆகியவை குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் பலமுறை ஆய்வு செய்தது. இந்நிலையில் சமீபத்தில், இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில், வாரணாசி மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் தாஸ் தலைமையில் 4 பேர் கொண்ட குழு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தது.

இதனிடையே, இந்திய மருத்துவக் கவுன்சில் உயர்மட்டக்குழு இன்னும் சில தினங்களுக்குள் இறுதி ஆய்வு நடத்த உள்ளனர். அதன்பின்னர் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க அனுமதி கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.   

இது குறித்து மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறுகையில், ‘‘இந்திய மருத்துவக்கவுன்சில் உயர்மட்டக் குழு சார்பில், மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒவ்வொரு துறையிலும் இறுதி ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 250 ஆக உயர்த்தி அறிவிக்கப்படும். உயர்மட்டக்குழு வருகையை முன்னிட்டு, அனைத்து துறைகளையும் தயாராக இருக்கவும், துறை சார்ந்த மருத்துவ ஆவணங்களை சரியாக வைத்திருக்கும்படியும், அவர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை முழுமையாக சீரமைக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார். 

Related Stories: