ஊராட்சி ஒன்றியங்களுக்கான தணிக்கை நிவர்த்தி கூட்டத்தை தவிர்த்த அதிகாரிகள் பிடிஓக்கள் காத்திருந்து ஏமாற்றம்

வேலூர், செப்.21:வேலூர், ஊராட்சி ஒன்றியங்களுக்கான தணிக்கை நிவர்த்தி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மதியம் வரை காத்திருந்த பிடிஓக்கள் ஏமாற்றமடைந்தனர்.வேலூர் மாவட்டத்தில் அடங்கிய 20 ஊராட்சி ஒன்றியங்களில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் பல பிடிஓக்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இவர்கள் காலத்தின் தணிக்கையின் போது கண்டறியப்பட்ட பல்வேறு ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்து தடையில்லா சான்று பெற்றால்தான் இவர்கள் ஓய்வு பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் 5வது மாடி கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றியங்களின் தணிக்கை நிவர்த்தி செய்யும் கூட்டம் மண்டல இணை இயக்குனர் (உள்ளாட்சி நிதி தணிக்கை) தலைமையில் ஊராட்சிகள் உதவி இயக்குனர்(தணிக்கை) லட்சமணன் மற்றும் பிடிஓக்கள் நிலையில் உள்ள தணிக்கை அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடந்தது. இதற்கான அறிவிப்பும் முன்னதாக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கான தடையில்லா சான்று பெறுவதற்காக ஓய்வு பெறும் நிலையில் உள்ள பிடிஓக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் அனைத்து ஆவணங்களுடனும் வந்து காலை 10 மணியளவில் வந்து காத்திருந்தனர். ஆனால், மண்டல இணை இயக்குனர்(உள்ளாட்சி நிதி தணிக்கை), ஊராட்சிகள் உதவி இயக்குனர்(தணிக்கை) யாரும் வரவில்லை. மதியம் வரை காத்திருந்த பிடிஓக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதற்கிடையில் கடந்த முறை நடந்த கூட்டத்தின்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வருவதாக கிடைத்த தகவலை அடுத்து கூட்டத்தை அவசர, அவசரமாக முடித்து விட்டு உள்ளாட்சி தணிக்கை பிரிவு அதிகாரிகள் கிளம்பி சென்றனர். இதனால் இப்போதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வரலாம் என்ற சந்தேகத்தால், தங்களை தங்கள் அலுவலகத்திலேயே வந்து சந்தித்து ‘என்ஓசி’ சான்று பெற்றுச் செல்லுமாறு ஓய்வு பெறும் நிலையில் உள்ள பிடிஓக்களுக்கு தகவல் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதாம். இதனால் பணத்துடன் வந்த பிடிஓக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: