பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பந்த் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது

திண்டுக்கல், செப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிராக பஸ்மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக வணிக சங்கத்தினர், சிறு, குறு வியாபாரிகள் சங்கத்தினர், மருத்துவ பிரதிநிதிகள் சங்கத்தினர், மீனவ சங்கத்தினர், லாரி, ஆட்டோக்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும், அமைப்பினரும் களத்தில் குதித்தனர்.திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஸ் தலைமை வகிக்க, முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி முன்னிலை வகித்தார்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ஜோசப், ராஜாமணி, ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்தியஅரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 23 பேரை கைது செய்தனர்.திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்வுமான செந்தில்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா,கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் நிஜக் கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பாக நடந்த உருவபொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகிக்க, துணைத்தலைவர் ஷாஜகான், கிழக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன், பொதுச் செயலாளர் வேங்கைராஜா, சட்டமன்ற தலைவர் மதுரைவீரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 22 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி சாலையில் இருந்து அவர்களது அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் பஸ்நிலையம், பெரியார் சிலை வழியாக வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டபடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்தனர்.

பழநி: பழநி பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம், நகரத் தலைவர் முத்து விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித்தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி, மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் பொன்மதி உட்பட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம்: நத்தம் பஸ்நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பஸ்மறியல் நடந்தது. ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜூ, மாநில செயற்குழு உறுப்பினர் முகமதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 72 பேரை கைது செய்தனர். நத்தம் ரவுண்டானா அருகே திமுக எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் தலைமையில் நடந்த மறியலில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசி, தமாகா, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சியினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பஸ்நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகிக்க, நகர செயலாளர் சின்னதுரை, காங்கிரஸ் கணவாபீர், மதிமுக மருதுஆறுமுகம், விசி உலகநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம், சித்தரேவு பகுதிகளில் பஸ்மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல், பழநி ‘வெறிச்’திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் லாரிகள் ஓடவில்லை. குறைந்த அளவில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 50 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அைடக்கப்பட்டிருந்தன. பந்த் காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. கொடைக்கானலில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், டாக்ஸிகள் இயங்கவில்லை. சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக இருந்ததால் அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாட்டு வண்டி ஓட்டி ‘மெடிக்கல் ரெப்’ எதிர்ப்புதிண்டுக்கல்லில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக மாட்டு வண்டிகளில் டூவீலர்களை ஏற்றி கொண்டு ஊர்வலமாக வந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் தலையில் கருப்புத்துணி கட்டி டூவீலர்களை தள்ளிக்கொண்டு ஊர்வலமாக நடந்து வந்தனர். டூவீலர்களில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை 0 சதவீதம் ஆக்க வேண்டும் என அட்டையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.இனி டிரைசைக்கிள் தான்திண்டுக்கல் நாகல்நகரில் மனிநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து டிரைசைக்கிளில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை இழுத்து வந்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: