எம்பி தொகுதியில் பயன்படுத்த 11 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் சரி பார்ப்பு பணி துவக்கம்

மதுரை, ஆக. 15: மத்தியில் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், வரும் ஏப்ரல், மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதியிலும், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான மின்னணு இயந்திரம் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மதுரை எம்பி தொகுதி மற்றும் விருதுநகர், தேனி எம்பி தொகுதிகளும் அடங்கியுள்ளது. மொத்தம் 2,714 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரூவில் இருந்து கொண்டு வரப்பட்டு மதுரை மாநகராட்சியின் பில்லர் அரங்கில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்த இயந்திரங்கள் முழுமையாக சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய ‘முதல் நிலை சரிபார்ப்பு பணி’ நேற்று துவங்கியது. அனைத்து கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் வீரராகவராவ் இப்பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி துணை ஆணையர் மணிவண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் உதயசங்கர் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மின்னணு இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய பெங்களூர், ஐதராபாத் பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் அபேல்குமார், சின்மாய்துபே ஆகியோர் தலைமையில் 16 பேர் குழுவினரை நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும், 6 ஆயிரத்து 810 வாக்குப்பதிவு இயந்திரம், 4 ஆயிரத்து 200 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 11 ஆயிரம் இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.

ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்தில் சரி பார்க்கப்பட்டு, பதிவேற்றம் செய்திருந்த மாதிரி வாக்குகளை அழித்து, பின்பு முறையாக 16 வேட்பாளர்களின் பொத்தான், ஒட்டு பதிவு விபரங்கள் கட்டுப்பாட்டு மின்னணு இயந்திரத்தில் சரியாக தெரிகிறதா என ஆய்வு செய்து சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு அனுப்ப தனியாக எடுத்து வைத்துள்ளனர். இந்த பணி 10 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது.

Related Stories: