கொச்சியில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்து பலியான மீனவர் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் காங். தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை

கருங்கல், ஆக.15: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகே முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டம் ராமன்துறை மீனவர்கள் 7 பேர், முள்ளூர்துறை மீனவர்கள் 2 பேர், மணக்குடி மீனவர்கள் 2 பேர், மேற்கு வங்க மீனவர்கள் 2 பேர் மற்றும் கேரள மீனவர் ஒருவர் என்று மொத்தம் 14 மீனவர்களை இந்திய அரசின் சரக்கு கப்பல் தேஷ் சக்தி இடித்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டது. அந்த வழியே மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இருவரை உயிருடனும், 5 பேரை சடலமாகவும் மீட்டுள்ளனர். இன்னும் 7 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இந்திய கப்பல் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்து இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கினால்தான் அக்குடும்பங்கள் வாழ முடியும். இந்த விபத்தினால் இரண்டு குடும்பங்கள் மொத்தமாக ஆண்களை இழந்து தவிக்கிறது.

விபத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்டுக்கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் சார்பில் குமரி மாவட்டம் தேங்காப்பட்டினத்தில் இது சம்பந்தமாக நாளை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தினர் கலந்துகொள்கின்றனர். அனைவரும் இம்மறியல் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: