நெடார் வெட்டாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தயார் நிலையில் மணல் மூட்டைகள்

தஞ்சை, ஆக. 14: தஞ்சை மாவட்டம் தென்பெரம்பூர் வெண்ணாற்றில் வெட்டாறு, வடவாறு பிரிகிறது. 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சென்று 100 கிலோ மீட்டர் பயணம் செய்து நாகூர் வரை வெட்டாறு செல்கிறது. இதனால் சுமார் 1 லட்சத்து 866 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆறறில் 9,523 கன அடி, வெண்ணாற்றில் 9,526 கனஅடி, கல்லணை கால்வாயில் 3,004 கன அடி, கொள்ளிடத்தில் 25,003 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெடார் வெட்டாற்றில் 15 கதவனை கொண்ட ஷட்டர்  உள்ளது. இதனால் கீழ் பகுதியிலுள்ள  பல்வேறு வாய்க்கால்களுக்கு  தண்ணீர் செல்வதற்கும், மேல்புறத்தில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் வகையில் தண்ணீர் திறந்தும் மூடப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீரின் வரத்து அதிகமாக இருப்பதால் மாவட்ட முழுவதும் உஷார் நிலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் ஜெயக்குமார் கூறுகையில்,

வெட்டாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின்படி நெடார் வெட்டாற்றின் கரையோரம் தயார் நிலையில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள், 10 ஆயிரம் காலி சாக்குகள், 10 டன் மரக்கம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நெடார் ஷட்டரில் 1,919 கன அடி கொள்ளவில் தற்போது 1,511 கன அடி தான் வருகிறது. இதில் 1,440 கன அடி பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தண்ணீர் அதிகமாக வந்தால் வெள்ளம் அபாய நிலை ஏற்படும். இதனால் நெடார் வெட்டாற்றின் கரையோரங்களில் உள்ள கிராமம் முழுவதும் விழிப்புணர்வு பதாதைகளை வைத்தும், தண்டோரா மூலமும், மைக்செட் மூலமும் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகிறோம். மேலும் கரை பாதுகாவலர்களை 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

Related Stories: