காளையார்கோவில் அரசுப்பள்ளியில் குப்பைமேடாக மாறி வரும் மைதானம்

காளையார்கோவில், ஆக.14: காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். காளையார்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 1970ம் ஆண்டிற்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திலேயே 15 ஏக்கர் பரப்பளவில் பெரிய விளையாட்டு மைதானத்துடன் இப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயின்ற ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போது 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றார்கள். இப்பள்ளியில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் புதர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மண்டிகிடக்கின்றன. இதனால் மாணவ, மாணவிகள் விளையாட முடியவில்லை.

அவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மைதானத்தை உடனே சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சமூக ஆர்வலர் தெய்வீகசேவியர் கூறுகையில், ‘‘பள்ளியில் உள்ள மைதானம் அலங்கோலமாக குப்பைகளுடன் காணப்படுகிறது. பள்ளிக்கூடத்தை சுற்றிலும் பாழடைந்த கட்டிடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் விஷப்பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனர். மேலும் பள்ளி நடக்கும் நேரங்களில் ஆடு, மாடுகள் மைதானத்திற்குள் வருகின்றன. எனவே பள்ளிக்கூடத்தை சுற்றிலும் சுவர் எழுப்ப ேவண்டும். மைதானத்தில் உள்ள புதர்கள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்,

Related Stories: