குமரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் சாலை அமைப்பு விசாரணை நடத்த கோரிக்கை

நாகர்கோவில், ஆக.14 :  குமரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட் டுக்கு செல்ல வசதியாக விதிமுறை மீறி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அதிகாரிகள் உடந்தையுடன் சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குமரி மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்த பகுதி ஆகும். குறிப்பாக பசுமைக்காடுகள் அதிகம் உள்ளன. இதனால் சோலோ பாரஸ்ட் என அழைப்பார்கள். இந்தியாவிலேயே குறிப்பிட்ட வனப்பகுதிகள் தான் பசுமை காடுகளாக உள்ளன. இதில் குமரி மாவட்ட வனப்பகுதிகளும் இடம் பெற்று இருப்பது மிகவும் போற்றுத்தலுக்குரியதாகும். இங்குள்ள வனப்பகுதிகளை மேற்கு ெதாடர்ச்சி மலையின் இதய பகுதி என்றும் அழைப்பார்கள். இவ்வளவு பெருமை மிகுந்த குமரி மாவட்ட வனப்பகுதிகள் சில கும்பலால் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. காடுகளில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் அழிக்கப்படுகின்றன. தேக்கு, ஈட்டி, சந்தனம் போன்ற மரங்கள் கடத்தல் கும்பலால் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கின்றன.

கேரளாவில் இருந்து கடத்தல் கும்பல் ஊடுருவி, இங்குள்ள வன பகுதிகளையும், வன விலங்குகளையும் வேட்டையாடிய வண்ணம் உள்ளன.  இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் (ரிசர்வ் பாரஸ்ட்) எந்த வித மரங்களையும் வெட்டக்கூடாது என்பது விதிமுறை ஆகும். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனியார்கள் சிலர், தங்களது எஸ்டேட்டுக்கு செல்ல வசதியாக  வனப்பகுதிக்குள் ரகசியமாக பாதை அமைத்துள்ளனர். மரங்களை வெட்டி அகற்றி இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வனத்துறையில் உள்ள அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.  தங்களது எஸ்டேட்டுக்கு சுற்றுப்பாதைகளில் செல்வதை தவிர்க்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டி கடத்தி விட்டு, இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜீப் செல்லும் வகையில் இந்த பாதையை அமைத்துள்ளனர்.  வனப்பகுதி விதிமுறை மீறி அழிக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் உடந்தையுடன் தொடர்ச்சியாக இது நடைபெற்று வருவதால் உடனடியாக இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சோனியா, ராகுல் பொது தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் குமரன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கு நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசுக்கும், வனத்துறை  அமைச்சருக்கும் உரிய ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளோம். இந்த நிலையில் தனியார் எஸ்டேட் உரிைமயாளர்கள் சிலர், தங்களது எஸ்டேட்டுகளுக்கு செல்ல வசதியாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து சாலை அமைத்துள்ளனர். முழுக்க, முழுக்க வனத்துறை உதவியுடன் தான் இது நடந்து இருக்கிறது. இந்த பிரச்னை ெதாடர்பாக  மாவட்ட வன அலுவலர் விசாரணை நடத்தி வருவதாக அறிகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறுவதை தடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: