திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் அரசு பஸ் சிறை பிடிப்பு

திருப்பத்தூர், ஆக.14: திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் அருகே உள்ள ஜம்மணபுதூர் ஊராட்சியில் ஜம்மணபுதூர் கூட்ரோடு, குமரன்நகர், தம்மனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 7 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. மேலும், கடந்த 3 மாதங்களாக முற்றிலும் குடிநீர் விநியோகம் செய்வதில்லையாம்.

பலமுறை பொதுமக்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பிடிஓவிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலி குடங்களுடன், ஜம்மணபுதூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா எஸ்ஐ பிரசன்னா மற்றும் போலீசார், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: