தமிழக மின்வாரியத்தில் 15 மாதங்களாக கூலியின்றி ஒப்பந்த பணியாளர்கள் பரிதவிப்பு நிதி வரவில்லை என்று அதிகாரிகள் பதில்

வேலூர், ஜூன் 21: தமிழக மின்வாரியத்தில் கடந்த 15 மாதங்களாக கூலி வழங்காததால் ஒப்பந்த பணியாளர்கள் 1300 பேர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழக மின்வாரியத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின்வாரியத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிகள் பாதிப்படைந்துள்ளது. எனவே, ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரியத்தில் தினக்கூலியாக 300 அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அப்போது மின்கம்பங்கள் நடுதல், மின்கம்பிகள் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதாக ஒப்பந்த பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், ‘கூலி வழங்க போதிய நிதி வரவில்லை’ என்று கூறி அலைக்கழிப்பதாக ஒப்பந்த பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவ்வாறு வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 15 மாதங்களாக கூலியின்றி பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறுகையில், ‘மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக கூலி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் நிதி வரவில்லை என்கின்றனர். இதேநிலை தான் தமிழகம் முழுவதும் இருப்பதாக, அதிகாரிகளே கூறுகின்றனர். இதனால், கடந்த 15 மாதங்களாக வேதனையில் இருக்கிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: