திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

முன்னதாக, கடந்த 25ம் தேதி இரவு ஊர்க்காவல் எல்லை தெய்வமான செல்லியம்மன் வீதி உலாவும், 26ம் தேதி இரவு விநாயகர் வீதி உலாவும் நடைபெற்றது. 5ம் நாளான கடந்த 31ம் தேதி சந்திரசேகரர் தொட்டி திருவிழா, எமதர்மருக்கு காட்சி அருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் வீதி உலாவும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.  தொடர்ந்து தியாகராஜர் 5ம் பவனி ராமபிரானுக்கு அருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 6ம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

இதில் சந்திரசேகரர் அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கிழக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி, கிழக்கு கடற்கரை சாலை, வடக்கு மாட வீதி வழியாக திருவீதி உலா வந்து கோயில் நிலைக்கு வந்தடைந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுமக்களும் அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கினர். 11ம் நாள் திருவிழாவான சந்திரசேகரர் தெப்ப திருவிழா வரும் 6ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

Related Stories: