இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல் மாஸ்டர் வெட்டிக்கொலை மற்றொரு மாஸ்டர் வெறிச்செயல்

உடன்குடி: உடன்குடி அருகே சடங்கு நிகழ்ச்சியில் பந்தியில் கூடுதலாக முட்டை கொடுக்க மறுத்த தகராறில் சமையல் மாஸ்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சிறுநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார்(50). சமையல் மாஸ்டர். இவரது தம்பி சுயம்புலிங்கம் மகள் பூப்புனித நீராட்டு விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. சமையல் வேலையில் மாஸ்டர்கள் செந்தில்குமார் மற்றும் இதே ஊரை சேர்ந்த உறவினர் துரைப்பாண்டி(60) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். விழா முடிந்ததும் அனைவருக்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டது. அப்போது பந்தியில் ஒருவர் கூடுதலாக முட்டை கேட்டுள்ளார். உடனே சமையல் மாஸ்டர் துரைப்பாண்டி, செந்தில்குமாரிடம், அந்த நபருக்கு கூடுதலாக ஒரு முட்டை வைக்கும்படி கூறியுள்ளார்.

இதற்கு அவர், ‘‘ஒரு ஆளுக்கு ஒரு முட்டை தான் கொடுக்க முடியும்’’ என்று கூறவே, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி வெளியே அனுப்பினர்.
அங்கும் இருவரும் மோதிக்கொண்டனர். ஆத்திரமடைந்த துரைப்பாண்டி, அரிவாளை எடுத்து செந்தில்குமாரை வலது காலில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

 

The post இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல் மாஸ்டர் வெட்டிக்கொலை மற்றொரு மாஸ்டர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: