2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022-23ம் நிதியாண்டில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.  கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.1,450 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 

கடந்த 2021ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 1.04 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ.833.41 கோடி செலுத்தியதன் மூலம்  வருவாய் கிடைத்தது. 2022-23 நிதியாண்டின் படி கடந்த மார்ச் மாதம் வரை உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2023-24ம் நிதி ஆண்டில்  ரூ.4,411.68 கோடி மதிப்பீட்டில்   பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான  அறங்காவலர்  குழு ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்  பங்குனி மாதம் பவுர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி அஷ்டதள பாத பத்ம ஆராதனை, நாளை முதல் 5ம் தேதி வரை  கல்யாண உற்சவம்,  மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம்   ரத்து செய்துள்ளது.

Related Stories: