திருவள்ளூர் அருகே பரபரப்பு: நரிக்குறவர்கள் தங்கிய இடத்தில் இரவில் பயங்கர பட்டாசு சத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், மணி, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள், இரவு நேரங்களில் விலங்குகளை வேட்டையாட செல்லும்போது வெடி சத்தம் அதிகமாக இருக்கும் பட்டாசை வாங்கி வைத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நரிக்குறவர்கள் 2 பேர் பீடி புகைத்து கொண்டு பேசி கொண்டிருந்துள்ளனர். புகைத்ததும், துண்டு பீடியை தூக்கி வீசிவிட்டு படுக்க சென்றனர். அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி துணியில் பட்டு அங்கு வைத்திருந்த பட்டாசு திரியில் பட்டதால் அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தன. அங்கு தங்கியிருந்த நரிக்குறவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அருகே நின்று கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்த போது நரிக்குறவர் ஒருவர் கையில் காயத்துடன் இருந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக செல்லும்போது வெடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பட்டாசு மீது, பீடியிலிருந்து பரவிய தீ பட்டதால் வெடித்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: