* நீ தான் தைரியமான ஆளாச்சே…..புஸ்ஸி, ஆதவ்வும் கப்சிப்
சென்னை: ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், படம் வெளியாக விடாமல் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் பாஜவை விமர்சிக்காமல் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்டவர்கள் வாய் மூடி மவுனம் காப்பது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார்.
அதே ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டியில் தனது கொள்கை எதிரி பாஜ என்ற கோஷத்துடன் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் பாஜவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்ற சூழ்நிலையில், சட்டசபை தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே, தனது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
பாஜவை ‘பாசிச கட்சி’ என்று விமர்சிக்கும் திமுகவை, விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் விஜய் விமர்சித்து பேசினார். ஆனால், திமுகவை நேரடியாக விமர்சித்த அளவுக்கு அவர் பாஜவையோ அல்லது மோடி குறித்தோ எதுவும் பேசவில்லை என்ற விமர்சனங்கள் அப்போதே எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய் தனது பிரசாரம், அறிவிப்புகள் என அனைத்திலும் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பாஜவை ஒன்றிய அரசு என்றும், மறைமுகமாகவும் விமர்சிப்பதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக விஜய் பாஜவின் பி டீம் என்றும் அரசியல் விமர்சகர்களால் அழைக்கப்பட்டார். மேலும், விஜய்யின் பிரசாரங்கள் எல்லாவற்றிலும் பாசிசம் என பாஜவை விமர்சிப்பது வழக்கம். அதேநேரத்தில், தவெக பொதுக்குழுவில் தப்பித்தவறியும் பாசிசம் பற்றி வாய் திறக்கவில்லை.
இப்படி திமுகவை வெளிப்படையாக விமர்சிப்பதும், பாஜவை மறைமுகமாக பேசுவதையே விஜய் வழக்கமாக வைத்திருப்பதால் தான் பாஜவின் நிர்பந்தத்துக்கு தவெகவும் தப்பவில்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் கரூரில் நடந்த விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாட்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் சைலண்ட் மோடில் இருந்த தவெக இப்போது ‘வைப்ரேஷன் மோடு’க்கு மாறியிருக்கிறது.
ஆனால் கரூர் சம்பவத்துக்கு பிறகு பாஜவை பற்றி பேசுவதை முற்றிலும் விஜய் தவிர்த்து வருவதாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆணையம் விசாரணை நடத்திய போது, விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா இவர்களில் யாரையும் நேரில் ஆஜராக உத்தரவிடவில்லை. ஆனால் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், புஸ்சி ஆனந்த், ஆதவ் ஆகியோர் விசாரணைக்கு நேரில் சென்று ஆஜராகினர். அதுமட்டுமல்ல, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வளவு நெருக்கடிகளை பாஜ, தவெகவுக்கு வெளிப்படையாக கொடுத்து வருவது அப்பட்டமாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு பிரச்னை என்றால் தமிழக அரசை பற்றி விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவதும், சமூக வலைதளங்களில் விமர்சிப்பதுமாக இருப்பார்கள்.
ஆனால் இந்த விவகாரத்தில் பாஜவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஒரு அறிக்கை கூட விட முடியாமல் மூவரும் வாய் மூடி மவுனம் காப்பது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கும் ஒன்றிய பாஜ அரசு செக் வைத்திருப்பது பாஜவின் பிடியில் தவெக சிக்கி விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு ஒன்றிய தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் சென்சார் போர்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முறையிடுவதாகவும் அதனை வருகிற திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டு உள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்சார் போர்டு வழக்கை தாக்கல் செய்தால் இன்றே விசாரிப்பதாக நீதிமன்றமே கூறும் நிலையில், தணிக்கை குழு ஏன் திங்கட்கிழமைக்கு விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறது என்ற வினா எழச்செய்கிறது. அதாவது, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற திங்கட்கிழமை சி.பி.ஐ. விசாரணை முன்பு விஜய் ஆஜராகிறார். இவ்விரு விஷயங்களை வைத்து விஜய்க்கு ஒன்றிய பாஜ அரசு அழுத்தம், நெருக்கடி தருகிறது என்றே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே, தமிழகத்தில் அதிமுக மூலம் காலூன்ற நினைக்கும் பாஜவின் பிடியில் தவெகவும் சிக்கி விட்டதா என்று எண்ண தோன்றும் அளவுக்கு தவெவுக்கு, பாஜ தொடர் நெருக்கடிகளை கொடுத்தும் வருகிறது. இந்த நிலையிலும் தவெக தலைவர் விஜய் மற்றும் அதன் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பாஜ குறித்து சிறு விமர்சனங்களை கூட முன்வைக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் விவாத பொருளாகியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த பிரச்னை தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன் ஒருவர் தனது பதிவில், ‘‘விஜய், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், ராஜ் மோகன்….
இதுவரைக்கும் ஒருத்தர் கூட ‘ஏ பாசிச பாஜ அரசேனு’ ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசல’ என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொருவர் தனது பதிவில், ‘‘படத்துக்குப் பேரு மட்டும் ஜனநாயகன்… ஆனா ரிலீஸ் பண்றதுக்கு டெல்லி வரைக்கும் போய் ‘மன்னிப்பு’ கேட்க வேண்டிய நிலைமை. இதான் அமித்ஷா – விஜய் கூட்டணியோட வெற்றியோ? என்று கேட்டுள்ளார்.
