திண்டிவனம்: பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு கொடுக்கும் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ஆட்சியில் பங்கு வேண்டாம் என்று கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போதே கூறி இருக்கிறேன்.
அந்த 5 வருடமும் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தோம். அப்போது காங்கிரசும் அந்த கூட்டணியில் இருந்தது. காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டுமென்று விருப்பம். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் கலைஞர் ஆட்சியை ஆதரிப்போம் என்று சொல்லி 5 வருடங்கள் ஆதரித்தேன்’ என்றார்.
நீங்கள் எடப்பாடியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டதற்கு, ‘2 விரலில் ஒரு விரலை தொடுங்கள், சொல்கிறேன்’ என்று சிரித்தார். தமிழ்நாட்டின் கூட்டணியை டெல்லிக்கு போய் வந்து தீர்மானிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘அரசியலில் யாரும் எப்போதும், எதை வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலில் இது சகஜமாகி விட்டது. இதுபற்றி கருத்து சொல்வது தவறு’ என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு ‘மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது’ என்றார். உங்களிடம் இருந்து கூட்டணி தொடர்பான அறிவிப்பு எப்போது வரும்? என்ற கேள்விக்கு, ‘வரும்… வரும்… விரைவில் வரும்…’ என்று ராமதாஸ் தெரிவித்தார். தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 50 தொகுதிகள் கேட்பதாகவும் தகவல் வருகிறதே? என்ற கேள்விக்கு, ‘உங்கள் கற்பனைக்கு எல்லாம் தீனி போட முடியாது.
கற்பனையான தகவலுக்கு பதில் சொல்ல முடியாது. பதில் சொல்வது சரியாக இருக்காது. நேரம் வரும், காலம் வரும், அப்போது பதில் தானாகவே கிடைக்கும்’ என்றார். அன்புமணி வலிய வந்தால் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘எனது தலைமையில் ஒரே அணி இருக்கும்போது, இணைவது என்ற பேச்சே கிடையாது’ என்றார்.
* அரசியலில் எதுவும் நடக்கும்
பாமக நிறுவனர் ராமதாசிடம், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். அரசியலில் எதுவும் நடக்காது என்று சொல்ல முடியாது என பதிலளித்தார்.
* பழம் நழுவி பாலில் விழுந்தது
கலைஞர் மொழியில் பழம் நழுவி பாலில் விழ வாய்ப்புள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஏன் இதை ஒரு கேள்வியாக கேட்கிறீர்கள்?. விழுந்துவிட்டது என்றே நினைத்துக் கொள்ளுங்கள்’ என்று ராமதாஸ் பதில் அளித்தார்.
* ராமதாஸ் மகள் தேர்தலில் போட்டி; பேரன்களுக்கும் வாய்ப்பு: ஜி.கே.மணிக்கு ‘கல்தா’
பாமக சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை ராமதாஸ் நேற்று காலை தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார். பொதுத் தொகுதிக்கு 1000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 500 ரூபாயும், பெண்களுக்கு 500 ரூபாயும் விருப்ப மனு கட்டணமாக செலுத்தி மனுக்களை பாமகவினர் வாங்கினர்.
கட்சிப்பணியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் ஜி.கே.மணி விருப்பமனு அளிக்கவில்லை. அதேவேளை ராமதாசின் மூத்த மகளும், அக்கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி மயிலம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக விருப்ப மனுக்களை ராமதாசிடம் அளித்தனர். மொத்தம் 2,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
சேலம் எம்எல்ஏ அருள், ராமதாசின் பேரன்கள் முகுந்தன், சுகந்தன், ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் போன்றவர்களும் விருப்ப மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, பேரன்கள் முகுந்தன், சுகந்தன் தேர்தலில் போட்டியிட விரும்பி அவர்கள் பெயரில் ஏராளமான பாமகவின விருப்பமனு அளித்தனர். தொடர்ந்து 4 நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
* அமெரிக்க அதிபரிடம் பங்கு கேட்போம்
கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறீர்கள். கூட்டணி அமைந்தால் ஆட்சியில் நீங்கள் பங்கு கேட்பீர்களா? என்று ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் இங்கு பங்கு கேட்க மாட்டோம். அமெரிக்காவில்தான் கேட்போம். இந்தியாவில் கேட்க எங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. அதனால் அமெரிக்க அதிபரிடம் போய் கேட்கலாம் என்று நினைக்கிறேன் என நகைப்புடன் பதிலளித்தார்.
* எடப்பாடிக்கு என்ன அழுத்தமோ? எம்எல்ஏ அருள் சந்தேகம்
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் கூறுகையில், ‘அன்புமணியுடன் எடப்பாடி கூட்டணி பேசியிருப்பது, என்ன அழுத்தத்தில் இந்த மாதிரி செய்தார் என்று தெரியவில்லை. இதை நீங்கள் எடப்பாடியிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் உறுதியாக அன்புமணி கூட கூட்டணி வைப்பவர்கள் ஏமாறப் போகிறார்கள்.
5.8 சதவீத வாக்குகள் என்பதால் ராமதாஸ் யாருக்கு போடச் சொல்கிறாரோ அவர்களுக்குதான் போடுவார்கள். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. பெற்ற தந்தையை மதிக்காத மகனை இந்த நாடு மன்னிக்குமா, ஆதரிக்குமா?. ராமதாசுக்கு துரோகம் செய்ய நினைப்பவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களை அன்புமணி கூட்டம் வஞ்சிப்பார்கள், கொள்ளையடிப்பார்கள்’ என்றார்.
