சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகையாக ரூ.2543.23 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (8ம் தேதி) சென்னை, பட்ரோடு நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், துணை முதல்வர் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை நியாயவிலை கடையிலும், அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4.1.2026 முதல் 7.1.2026 வரை தொடர்புடைய நியாயவிலை கடை பணியாளர்களால் வழங்கப்பட்டது.
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலை கடை பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. நேற்று மாலை வரை தமிழகம் முழுவதும் 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகை ரூ.2543.23 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
