புட்லூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க அரசு முன்வருமா?...ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கேள்விக்கு வேளாண் இயக்குனர் பதில்

திருவள்ளூர்: பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் பேசும் போது, புட்லூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு வேளாண்மை இயக்குனர் தரப்பில் அளித்துள்ள விளக்கம் வருமாறு: திருவள்ளூர் வட்டம், புட்லூர் கிராம அரசு தென்னை தாய்மர தோட்ட பண்ணையில் 55.20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கூவம் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பில் 50 அடி ஆழம் கொண்ட 2 திறந்த வெளிக்கிணறுகளும், 7 ஆழ்துளை கிணறுகளும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இந்த பண்ணை நிலத்தை பயன்படுத்த ஏதுவாக பண்ணைக்கு மிக அருகில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புட்லூர் அரசு பண்ணை நிலத்தினை பயன்படுத்த ஏதுவாகவும், புதிய அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க புட்லூர் அரசு பண்ணையில் 55.20 ஏக்கரும், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 41.99 ஏக்கரும் என 97.19 ஏக்கர் நிலப்பரப்பு ஒரு சேர அமைந்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக விதிகளின்படி அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க 74.10 ஏக்கர் நிலம் போதுமானதாக உள்ள நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திடமிருந்து புதிய அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க ஏதுவான விவரங்கள் தெரிவிக்க கோரப்பட்டு கடந்த ஜூலை 2021ல் கருத்துரு அனுப்பப்பட்டது.

இதற்கான கோப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு வேளான் கல்லூரிகள் ஏதும் இல்லாத காரணத்தினால் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நிலப்பரப்பினை கொண்டு அரசு வேளாண்மை கல்லூரி அமைத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: