செய்யூர்: சீவாடி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் சீர்வரிசை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் சீவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், புதிய மாணவர்கள் சேர்க்கையோடு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
