கல்வி உதவித்தொகை பெற வங்கி பாஸ் புக் இல்லாதவர்கள் தபால் நிலையத்தில் கணக்கு துவங்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்  வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே  மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதற்காக, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இந்திய அஞ்சல் துறை மண்டல மேலாளர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒருங்கிணைந்து பள்ளி வாரியாக வங்கி கணக்கு துவங்க வேண்டிய மாணவர்களின் விவரங்களின் படி, தபால் துறை ஊழியர்கள் மூலம் பள்ளிகளில் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அஞ்சலக ஊழியர்கள் பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

அஞ்சலக வங்கி கணக்கு துவங்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை வங்கி கணக்கு இல்லாதவர் அல்லது வங்கி கணக்கு பயன்பாட்டில் இல்லாத மாணவர்களின் பெற்றோர் அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு ஆதார் அட்டை மற்றும் கைபேசியுடன் சென்று கணக்கு துவங்கிடுமாறும், மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Related Stories: