சாக்கு மூட்டையில் வீசப்பட்ட மாணவி வழக்கில் திருப்பம் கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் தற்கொலை

கோபி: கோபி அருகே கல்லூரி மாணவியை கை, கால்களை கட்டப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாக வீசப்பட்ட வழக்கில் காதலனான ஐடி ஊழியர் கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து உள்ளார். இதை மறைக்க கொலை நாடகமாடிய ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்தவர் குமார்- மஞ்சுளாதேவி தம்பதி மகள் ஸ்வேதா (21).  கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 28ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது தாய் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஸ்வேதாவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொங்கர்பாளையம்  தண்டுமாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சாக்கு மூட்டையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஸ்வேதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது  கொங்கர்பாளையம்  தண்டுமாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த விருசாமி மகன் லோகேஷ் (23) என்பவரும், ஸ்வேதாவும் காதலித்து வந்தது தெரியவந்தது.

லோகேஷ் எம்எஸ்சி பட்டதாரி என்பதும், தற்போது பங்களாபுதூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. ஸ்வேதா படித்த கல்லூரியில்  லோகேஷ் எம்எஸ்சி படித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததும், அதன்பின்னர் அவர்கள் தனிமையில் சந்தித்து பேசி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த லோகேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சடலம் மீட்கப்பட்ட பகுதியில் ஸ்வேதாவும், லோகேஷும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஸ்வேதா கர்ப்பமடைந்துள்ளார். சம்பவத்தன்று தண்டுமாரியம்மன் கோயில் பகுதியில் வழக்கமாக காதல் ஜோடி சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஸ்வேதா  தான் 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும், உடனே திருமணம் செய்யுமாறும் லோகேசை வலியுறுத்தியுள்ளார். ஆனால் லோகேஷ் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதியத்திற்கு மேல் நேரமாகிவிட்டதால் தனக்கு பசிக்கிறது. சாப்பாடு வாங்கி வா என்று லோகேசை அனுப்பி வைத்தார்.

ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து பார்த்தபோது ஸ்வேதா அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லோகேஷ் தற்கொலையை மறைக்க ஸ்வேதாவின் உடலை மீட்டு கை, கால்களை கட்டிப்போட்டு சாக்குமூட்டை கட்டி போட்டு கிணற்றில் வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லோகேஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தூக்கில் தற்கொலை செய்த ஸ்வேதாவின் உடலை ஒரு நபரால் இறக்கி கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் போட்டு கிணற்றில் வீசி இருக்க வாய்ப்பு குறைவுதான். இவருக்கு உடந்தையாக வேறு சில நபர்களும் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: