14வது முறையாக ஒருமனதாக நிறைவேற்றம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சட்டசபையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என  எதிர்கட்சி தலைவர் சிவா,  திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நேரு, அனிபால்கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா (திமுக): 1987ம் ஆண்டு முதல் 36  ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயக மாண்புகளை காக்கவும், நமக்கான உரிமைகளை பெற்றுத்தரவும் தொடர்ச்சியாக தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை ஒன்றிய அரசு நிராகரித்தது.  1954ம்  ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சபைக்கு இருந்த அதிகாரம் கூட இப்போதைக்கு இல்லை. 1963ம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டம் கொண்டுவரப்பட்டு புதுச்சேரி  மாநிலத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது.  முதல்வர், அமைச்சர்களுக்கு இல்லாத அதிகாரம் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநருக்கும், தலைமை செயலருக்கும் இருக்கிறது. இங்கிருக்கும் அதிகாரிகள் முதல்வர், அமைச்சர் சொல்வதை  கேட்பதில்லை,தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு விசுவாசமாக  இருப்பதில்லை. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. இந்த தடையெல்லாம் நீங்க முழு தகுதியுடைய மாநில அந்தஸ்து தேவை.

அமைச்சர் நமச்சிவாயம் (பாஜ): புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பதுதான் பாஜவின் எண்ணம். அத்தனை வகையிலும் ஒத்துழைப்பு தருவோம். அதிகாரிகள் தங்களுக்கான அதிகாரம் பறிபோய்விடுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. அத்தனை தீர்மானங்களும் டெல்லி சென்றடைந்ததில்லை. இந்த முறை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி: மாநில அந்தஸ்து வேண்டும் என எல்லோரும் விளக்கமாக பேசியிருக்கின்றனர். எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் விபரமாகவும் பேசி இருக்கிறார்கள். மாநில அந்தஸ்து மட்டுமே இதற்கு ஒரே வழி. அதனை ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது. நல்லது நடக்கும், மாநில அந்தஸ்தும் கிடைக்கும். இவ்வாறு பேசினர். இதையடுத்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது சட்டசபையில் இருந்த 33 எம்எல்ஏக்களும் எழுந்து  நின்று மேஜையை பலமாக தட்டி  வரவேற்பு தெரிவித்தனர். மாநில அந்தஸ்து  தொடர்பாக 14வது முறையாக புதுச்சேரி  சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: