ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை பாஜ அரசு கையாளுகிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

திருச்சி: ‘ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும் வகையில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு வருகிறது’ என்று முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்கு மிகுந்த விசுவாசியாகவும், ஏஜென்டாகவும் மோடி செயல்படுகிறார். அதானி பிரச்னைக்காக நாடாளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கும் சம்பவம் இந்தியாவில் தான் நடக்கிறது. அதானியின் கடன்களை ஒன்றிய அரசு எப்படி தள்ளுபடி செய்கிறதோ, அதேபோல் மாணவர்களின் கல்வி கடனை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ஒரே நாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும் வகையில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க திட்டமிட்டு ராகுல்காந்தி மீதான அடக்குமுறையை முன்னெடுத்துள்ளது. பாஜக ஒரு புல்லுருவி என்பதை இந்த நாடு அறிந்திருக்கிறது. அதை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். அதிமுகவை அடிப்படையாக கொண்டு தமிழகத்துக்குள் நுழைய பாஜ முயற்சித்து வருகிறது. அதற்கு இடம் கொடுத்ததும் அதிமுக தான். பாஜ சொல்வதை அதிமுக செய்வதால் அவர்கள் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: