ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க  நரிக்குறவர்களை உள்ளே அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிம்பு,  பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் பத்து தல. இந்த  படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. கோயம்பேட்டிலுள்ள ரோகிணி தியேட்டரில் இந்த  படத்தை பார்க்க நரிக்குறவ பெண் ஒருவர், சிறுவர்களுடன் வந்தார். அவரிடம்  படத்துக்கான டிக்கெட்டுகள் இருந்தன. ஆனாலும், அவரை தியேட்டருக்குள் ஊழியர்  அனுமதி தர மறுத்தார். அவர்களை வெளியே போகும்படியும் கைகாட்டினார். இந்த  காட்சியை பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து டிவிட்டரில் பதிவிட்டார்.  இதையடுத்து ரோகிணி தியேட்டர் நிர்வாகத்துக்கு எதிராக நெட்டிசன்களும் சமூக  ஆர்வலர்களும் கொதித்து எழுந்தனர். ‘தீண்டாமை ஒழிந்துவிட்டதாக சொன்னாலும்  அது இன்றும் ஒழியவில்லை. இதுபோன்ற நபர்களால் நாடு பின்னோக்கி செல்லும்’ என  பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதே சமயம், தியேட்டரில் இருந்த  ரசிகர்களும் ரோகிணி தியேட்டர் நிர்வாகிகளிடம் அந்த பெண்ணை அனுமதிக்கும்படி  கேட்டு சண்டை போட்டனர். ஆனாலும் நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்கவில்லை. இது  ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் சமூக  வலைத்தளத்தில் பரவியதால், நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த பெண்ணும்  சிறுவர்களும் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.  இது தொடர்பாக ரோகிணி  தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘பத்து தல யுஏ சான்றிதழ்  படம். அதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்க மறுத்தோம். வேறு  காரணம் இல்ைல’ என்றார். இது பற்றி ரசிகர்கள் கூறும்போது, ‘தியேட்டருக்குள்  12 வயதுக்குட்பட்ட பல சிறுவர், சிறுமிகள் வந்தனர். இவர்களை மட்டும்  அனுமதிக்க மறுத்தது ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 2 ஊழியர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: