கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: கூகுள் மீது வர்த்தக ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐயின் உத்தரவு சரியானது என தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. 30 நாட்களுக்குள் 1,337 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிக போட்டி ஆணையம்(சிசிஐ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.

இந்திய வணிக போட்டி ஆணையம் விதித்த அபராதத்தை எதிர்த்து தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கூகுள் நிறுவனம் முறையீடு செய்தது. மேலும், இந்திய வணிக போட்டி ஆணையத்தின் விசாரணையில் இயற்கை நீதி இல்லை எனவும் கூகுள் வாதிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு நேற்று தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நீதிபதி அலோக் பூஷண், உறுப்பினர் அலோக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் விதித்த 1337.76 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  30 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனவும், உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: