ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தை கூண்டோடு கலைத்தார் அண்ணாமலை கூவி கூவி விற்கப்பட்ட பாஜ கட்சிப் பதவிகள்: ரூ. 30 ஆயிரம் பேரம் பேசிய நிர்வாகி தற்கொலை முயற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜவை மாநில தலைவர் அண்ணாமலை கூண்டோடு கலைத்ததற்கு, நிர்வாகிகள் கட்சி பதவிகளை விற்றதே காரணம் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபா கார்த்திகேயன் (34). போகலூர் ஒன்றிய பாஜ இளைஞரணி தலைவர். சத்திரக்குடி அருகே செவ்வூரை சேர்ந்தவர் மோடி மகி (எ) மகேந்திரன் (28). பாஜ உறுப்பினர். இந்நிலையில், போகலூர் ஒன்றிய இளைஞரணி நிர்வாகி பதவிக்கு மோடி மகியிடம், பிரபா கார்த்திகேயன் ரூ. 30 ஆயிரம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோ விவரம் வருமாறு:

மோடி மகி: அண்ணே, மச்சானிடம் பேசினேன். எவ்வளவு? பிரபா   கார்த்திகேயன்: உன்னால் எவ்வளவு பண்ண முடியும்? இந்த விஷயத்தை போன்ல   பேசக்கூடாது. உன் பெயர், அப்பா பெயர், முகவரி போட்டு விடு, லட்டர் பேடு  ரெடி  பண்ணணும். முதல்ல ஆயிரம் ரூபாய் போட்டு விடு. மோடி மகி: அண்ணே போஸ்டிங்க்கு எவ்வளவு வேணும்?பிரபா கார்த்திகேயன்: உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?

மோடி   மகி: காளிதாஸ் ஒன்றிய தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாக   சொன்னார். அதான் அண்ணே. மாவட்டம் கதிரவனுக்கு வேற கொடுக்கணும். அவர்ட்ட   கொடுத்திட்டா போஸ்ட்டிங் வாங்கிடலாம். அவ்வளவு  தொகை கொடுக்க நான் பெரிய   ஆள் இல்லை. பிரபா கார்த்திகேயன்: அவர்க்கு கொடுக்க வேண்டியதில்லை. சரி 50 ஆயிரம் கொடு.

மோடி மகி: அதாண்ணே... மாவட்ட தலைவருக்கு வேற ெகாடுக்கணும்ல. பிரபா கார்த்திகேயன்: இத போன்ல பேசக்கூடாது. ராம்நாடு நேரில் வா. நீ தான் கன்பார்ம். ஒரு 30 ஆயிரம் கொடுக்க முடியுமா?

மோடி மகி: இல்லணே இப்போதான் முதுகுளத்தூரில் கடை திறந்தேன் பணம் இல்லை. பிரபா கார்த்திகேயன்: நீ எங்கே இருக்க?

மோடி மகி: கடையில். பிரபா கார்த்திகேயன்: சரி  பணம் போட்டு விடு. இந்த நம்பர் தான் கூகுள் பே. போனில் ரெக்கார்ட் ஆகும்.  அப்புறம் 2 பேருக்கும் பிரச்னை. இவ்வாறு உரையாடல் முடிகிறது.

ஆடியோ வெளியானதால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டதாக கூறி, பிரபா கார்த்தியேன் கடந்த 22ம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து பிரபா கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் மாவட்ட பாஜ பொறுப்பாளர் ஜிபிஎஸ். நாகேந்திரன் (55), தங்கச்சிமடம் பவர் நாகேந்திரன் (52), மோடி முனீஸ் (30), செவ்வூரை சேர்ந்த மோடி மகி (எ) மகேந்திரன் (28), தேர்போகியை சேர்ந்த கோசாமணி (29), பரமக்குடி முத்துராமலிங்கம் (34) ஆகியோர் மீது பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பாஜவில் உள்ள அனைத்து நிர்வாக பொறுப்புகளையும் கலைத்தும், புதிய மாவட்ட தலைவராக தரணி ஆர்.முருகேசன் என்பவரை நியமித்தும் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென உத்தரவிட்டார். ஏற்கனவே பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியை விட்டு வெளியேறும் நபர்கள் கூறி வரும் நிலையில், பதவிகளுக்கு பணம் பெற்ற  விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி தற்கொலைக்கு முயன்று மாவட்ட நிர்வாகத்தையே அண்ணாமலை கூண்டோடு கலைத்த  சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

* சர்ச்சையில் சிக்கிய மாவட்ட தலைவர்  2022ல் பாஜவில் இணைந்த கதிரவனுக்கு கடந்த மே மாதம் மாவட்டத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்த அதிருப்தியால் சில மாதங்களிலேயே மாவட்ட பாஜவில் கோஷ்டிபூசல்கள் வெடித்தன. மாவட்டத் தலைவர் கதிரவன் மீது பல குற்றச்சாட்டுகளை கட்சியினர் கூறத்தொடங்கினர். கடந்தாண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜவினர் அஞ்சலி செலுத்தும்போது, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. இதற்கு காரணம் மாவட்டத் தலைவர் கதிரவன் என கட்சியினரால் பேசப்பட்டது.

Related Stories: