சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு தானியங்கி நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் கட்டணம் வசூல்: 6 மாதத்தில் நடைமுறைக்கு வருகிறது

* சிறப்பு செய்தி

இன்னும் 6 மாதத்திற்குள் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு தானியங்கி நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வழக்கமாக உள்ள பாஸ்டேக் முறையை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்களில் நம்பர் பிளேட்டை தானியங்கி முறையில் ஸ்கேன் செய்து, அதன் உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கும் முறை இன்னும் 6 மாதத்தில் நடைமுறைக்கு வருகிறது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் 50 மீட்டர் பயணிக்கும் கிராமத்தை, நகரத்தை சேர்ந்த ஒரு வாகன ஓட்டி இதுவரை கட்டணம் கட்டவில்லை.

இந்த முறை அமலுக்கு வந்தால் சாலையை கிராஸ் செய்தாலே பணம் கட்டவேண்டியது வரும். இது பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடும் என்று வாகன உரிமையார்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாஸ்ட் டேக் முறை இந்தியா முழுவதும் அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே வழக்கத்தில் உள்ள இந்த முறை நீக்கப்பட்டு, சுங்கச்சாவடி கட்டணங்களை ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் ஒன்றிய அரசு வசூலிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் எதிர்காலத்தில் சுரங்கச்சாவடி இருக்காது என்றும், அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் இனி நிறுத்த வேண்டிய நிலை இருக்காது. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வாகன கட்டணம் கணக்கிடப்பட்டு வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து தானாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் பாஸ்ட் டேக் என்ற முறையே மக்களிடம் பெரும் குழப்பதை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை மக்கள் தெளிவாகவில்லை. அதற்குள் மாற்று முறையாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கொண்டுவரப்படுவது பொதுமக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

பாஸ்ட்டேக் முறைக்கு பதிலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டணம் கணக்கிடப்பட்டு வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். பாஸ்ட் டேக் என்ற முறையே இன்னும் பெரும்பாலான மக்களிடம் சென்று சேராத நிலையில் ஒன்றிய அரசின் புதிய முறை குழப்பத்தை தான் தரும். வாகன உரிமையாளரின் சம்மதம் இல்லாமல் எப்படி பணத்தை எடுக்க முடியும். இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் பொதுமக்கள். வேறு ஒருவரின் நம்பரினை தன் பிளேட்டில் எழுதி, சுங்கச்சாவடியை கடந்தால் அந்த போலி நம்பரின் உண்மையான உரிமையாளரின் வங்கி கணக்கிலிருந்துதான் பணம் எடுக்கப்படும். இதன் மூலம் கட்டண மோசடியால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காரணம், பெரும்பாலானவர்கள் வாகனம் வாங்கினாலும், உடனே வாகன உரிமையாளர் பெயரை மாற்றுவதில்லை.

ஏஎன்பிஆர் நடைமுறைக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஒரு தேசிய நெடுஞ்சாலைக்குள் உள்ளே நுழையும் மற்றும் வெளியே செல்லும் பகுதிகளில் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை எடுத்து எந்த இடத்தில் இந்த வாகன தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்துள்ளது என்று சிஸ்டத்திற்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் எங்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறுகிறது என்பதையும் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் கட்டணத்தை ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை வசூலிக்கும்.

அதன்படி, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இந்தியா முழுவதும் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடிங் முறையை பரிசோதனை செய்தது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் இந்த திட்டம் செயல்படுத்தும் விதம், அதில் உள்ள சாத்திய கூறுகள் உள்ளிட்ட அம்சங்களை கண்காணித்து கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்தது. அதனை தொடர்ந்து ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடிங் முறையின் சாத்திய கூறுகள் சரியாக உள்ளதால் நடைமுறைப்படுத்த  ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ இன்னும் 6 மாதத்திற்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஏஎன்பிஆர் என்ற தானியங்கி நம்பர் பிளேட் ரீடிங் கேமராக்கள் நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படும். அதன்படி சாலையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை ரீடிங் செய்து அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். சுங்கச்சாவடிகளை அகற்றியதும் ஏஎன்பிஆர் நடைமுறைக்கு வரும்’’ என்றார்.

Related Stories: