கொங்கு மண்டல அதிமுகவில் கிளம்பும் புயல்: புது ரூட் எடுக்கும் ‘பெல் பிரதர்ஸ்’அதிருப்தியில் கே.பி: கட்சி தாவல் தலைமைக்கு குறி ஷாக்கில் எடப்பாடி

 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னைகள் முளைத்துக்கொண்டே வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கொங்கு மண்டலத்தில் செல்வாக்குமிக்க தலைவர்களாக இருந்த தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரது கைகள் அப்போதைய ஆட்சியிலும், கட்சியிலும் ஓங்கியது. ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கமணி சம்பந்தி முறை என்பதால் தங்கமணியும், கொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பெரும் பகுதியினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் வேலுமணியும், எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கைக்குரிய நபர்களாக திகழ்ந்தனர். இவர்கள் இருவரையும் ‘பெல் பிரதர்ஸ்’ என பத்திரிகைகள் வேடிக்கையாக அழைக்கும் அளவிற்கு இணை பிரியாமல் இருந்து வந்தனர்.

இவர்களின் பேச்சை கேட்டே எடப்பாடி பழனிசாமி எல்லா முடிவுகளையும் எடுத்து வந்தார். பாஜ உடன் அதிமுக கூட்டணி அமைக்கவும் ‘பெல் பிரதர்ஸ்’தான் முக்கிய காரணமாக இருந்தனர். ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விகளால் மனமுடைந்த எடப்பாடி பழனிசாமி, பாஜ கூட்டணியை கைகழுவிவிட நேரம் பார்த்து காத்திருந்தார். இந்த சூழலில் அதிமுக தலைவர்களை தொடர்ந்து சீண்டி வந்த அப்போதைய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் கொண்ட ‘அதிமுக பைல்ஸ்’ வெளியிடப்படும் எனக்கூறியது எடப்பாடி பழனிசாமியிடம் கொதிப்பை ஏற்படுத்தியது.

அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அண்ணாமலை கடும் விமர்சனங்களை முன்வைத்ததும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதை, காரணமாக காட்டி, பாஜ உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி கை கழுவினார். ஆனால், அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. கோவை உள்பட பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த தோல்விக்கு பாஜ உடன் கூட்டணி வைக்காததே காரணம் எனக்கூறிய எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர், மீண்டும் பாஜ உடன் கூட்டணி வைக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். இதனால், இனி எந்த காலத்திலும் பாஜ உடன் கூட்டணியே கிடையாது என வீரவசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி மனமாற்றம் அடைந்தார்.

டெல்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறி, டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, 3 கார்கள் மாறி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மீண்டும் கூட்டணிக்கு அச்சாரமிட்டார். இதையடுத்து, சென்னை வந்த அமித்ஷா அதிமுக – பாஜ கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி இருந்தாலும், தங்கமணி மிஸ்ஸிங் ஆனது பேசுபொருளானது. அதன்பின்னர் தங்கமணி, வேலுமணியை ஒன்றாக பார்க்க முடிவதில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவுகளை அறிவிக்கும்போதுகூட தங்கமணி தலையை பார்க்க முடிவதில்லை. வருகிற டிசம்பர் 10ம்தேதி சென்னையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பான தீர்மான குழுவிலும் கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ள தங்கமணிக்கு இடம் தரப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருக்கும் தங்கமணி, கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவஞ்சலி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். இதனிடையே, அதிமுகவில் தனது முக்கியத்துவத்தை இழந்த தங்கமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து பேசியது கவனம் பெற்றது. எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் தங்கமணி, திமுகவிலோ அல்லது செங்கோட்டையன் பாணியில் தவெகவிலோ இணையலாம் என்ற தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பாஜ தீவிரமாக உள்ளது. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டுவர பாஜ எடுத்த முயற்சிகள் மண்ணை கவ்வவே, செங்கோட்டையனை பாஜ கைவிட்டு விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க பாஜ முயல்வதை எடப்பாடி பழனிசாமி அறவே விரும்பாத நிலையில், அதிமுகவை பலவீனப்படுத்தும் வேலைகளில் பாஜ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சித்து விளையாட்டுதான் செங்கோட்டையன் விலகலும், தங்கமணி அதிருப்தியும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை தேர்தலுக்கு முன்பாக பாஜ உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறிக்க முற்பட்டால், கொங்கு மண்டலத்தில் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக உள்ள எஸ்.பி.வேலுமணி பாஜ துணையோடு அதிமுக தலைமை பொறுப்பை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி விழி பிதுங்கி நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, கொங்கு மண்டல அதிமுகவில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

இதேபோல், அதிமுக துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமியும், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளார். இதனால் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளிலும், எடப்பாடி நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் ஆப்சென்ட் ஆகி உள்ளார். செங்கோட்டையன் தவெக சென்ற பிறகு கே.பி.முனுசாமியும் அதிமுகவில் இருந்து வெளியேற போவதாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்த தகவலை கே.பி.முனுசாமி மறுக்கவே இல்லை.

சமீபத்தில் சேலம் அதிமுக நகர செயலாளரும், ஓமலூர் எம்எல்ஏவுமான மணியின் மகன் திருமணத்துக்கு வந்த கே.பி.முனுசாமி, எடப்பாடியை சந்திக்காமலே மணமக்களை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்று உள்ளார். அப்போது, எடப்பாடியின் வலதுகரமாக உள்ள மாவட்ட செயலாளர் இளங்கோவன், எடப்பாடியை பார்த்துவிட்டு செல்லுமாறு கூறி உள்ளார். ஆனால், கே.பி.முனுசாமி எடப்பாடியை சந்திகாமல் நடையை கட்டினார். இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதனால், கே.பி.முனுசாமி விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

* பலிகடா ஆக்கப்பட்ட அண்ணாமலை

அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தேர்தல் வெற்றிக்கு அதிமுக கூட்டணி அவசியம் என்பது மற்ற பாஜ தலைவர்களின் கருத்தாக இருந்தது. இதனால், மீண்டும் கூட்டணி அமைக்க டெல்லி தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டது. அப்போது, அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்காமல், கூட்டணி அமைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கறாராக கூறியதால், அண்ணாமலையின் பதவியை பறிக்க டெல்லி தலைமை ஒப்புக்கொண்டது. இதன்பிறகே, பாஜ உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டார். இதனால், தனது பதவி பறிபோக காரணமான எடப்பாடி பழனிசாமி மீதும், கூட்டணி தொடர்பாகவும் அவ்வப்போது அண்ணாமலை எதிர்மறை கருத்துகளை கூறி வருகிறார்.

* பாஜவை நம்பி ஏமாறும் அதிமுக நிர்வாகிகள்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தனித்தனி அணிகளாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை பாஜ இணைத்து வைத்தது. ஆனாலும், மனங்கள் இணையாததால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பலமுறை டெல்லி சென்று வந்தாலும், மீண்டும் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தால் இணைய முடியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ உடன் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர், அண்மையில் அதிமுக வரவினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

பாஜவிற்கு ஆதரவாக இருந்தாலும் சசிகலாவினால் மீண்டும் அதிமுகவில் இணையமுடியவில்லை. அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க முயற்சித்த செங்கோட்டையன், பாஜ தலைமையை நம்பி டெல்லி சென்று வந்தார். அதன்பிறகு அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட, அதிருப்தியில் தவெகவில் இணைந்தார். பாஜவை நம்பி எடப்பாடி பழனிசாமியோடு முரண்படும் அதிமுக நிர்வாகிகள் ஏமாறுவது தொடர் கதையாகியுள்ளது.

* முக்கிய முடிவுகளை எடுக்கும் வாரிசு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தலைமையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர்களை நியமிக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் மிதுனுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வழங்கியுள்ளார். இதனால், தனக்கான முக்கியத்துவத்தை இழந்த தங்கமணி, அதிருப்தியில் தொடர்ந்து அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: