வல்லம் ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் அவலம் சேதமடைந்த ஏரி மதகுகளை சீரமைக்காததால் விவசாயம் பாதிப்பு

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செஞ்சி : வல்லம் ஒன்றியத்தில் சேதமடைந்த ஏரிகளின் மதகுகளை சீரமைக்காததால், நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வுகாண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லம் ஒன்றியத்தில் உள்ள  பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் பராமரிப்பில் உள்ள பல  ஏரிகளின் மதகுகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் மழைநீர்  வீணாகி விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. வல்லம் ஊராட்சியில் உள்ள ஏரியின் மதகு உடைந்து, கடந்த 15 ஆண்டுகளாக மழை நீர் ஏரியில் தேங்காமல்  வெளியேறி வருகிறது. இதனால் ஏரியின் கீழ் உள்ள 60 ஏக்கர் விளைநிலங்கள் பயிர்  செய்ய முடியாத  நிலையில் இருந்து வருகிறது. மேலும் மதகு உடைந்ததால்  மீதமுள்ள 200 ஏக்கரில் மூன்று போகம் பயிர் செய்த நிலையில், ஒரே போகம்  செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஏரியில் நீர்  தேக்கி வைத்தால் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். ஆனால் ஏரியில் தண்ணீர் நிற்காததால்  கிணற்றில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார  அமைப்பு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் மழைக்காலத்திற்குள் ஏரியின் மதகை சீர் செய்து  தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஏரி நீர் வெளியேறுவதால் ஏரியின் கீழ்  உள்ள விளைநிலங்களில் ஆள் உயரம் கோரை புற்கள் வளர்ந்து  விவசாயம் செய்ய  முடியாத நிலை உள்ளது.

இதேபோல் சொரத்தூர் ஏரி மதகு சேதமடைந்துள்ளதால் 450 ஏக்கரில் பயிர் செய்யக்கூடிய விளைநிலங்களில் ஒரே  போகம் பயிர் செய்து வருகின்றனர். இந்த ஏரியின் கீழ் உள்ள விவசாய  நிலங்களில் இருபோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் தண்ணீர் தேங்காததால் கிணற்று பாசனமும் குறைந்து நீர்மட்டமும் குறைந்து வருகிறது. மேலும் கல்லடிகுப்பம் ஏரி மதகு உடைந்து  உள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே இதுபோன்று மதகு உடைந்து பல  ஆண்டுகளாக சீர் செய்யப்படாத ஏரிகளை கணக்கிட்டு உடனடியாக மதகுகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை நீராதார அமைப்பும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வல்லம்  பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: