சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தருவதற்கான திட்ட பயணங்களை வகுத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இம்மாத இறுதியில் தமிழகம் வருகை தர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த பரபரப்புகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரும் 13ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்குச் செல்கிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து காரில் விழா நடைபெறும் பள்ளிக்குச் சென்று பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டுச் செல்கிறார்.
கூடலூருக்கு வருகைதரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல், விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு காங்கிரசார் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த காவல்துறை பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
வரும் 13ம்தேதி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வருகை தரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை வரவேற்கவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக்குழு நியமிக்கப்படுகிறது. இந்த குழுவில் எம்எல்ஏக்கள் ரூபி ஆர்.மனோகரன், ஆர்.கணேஷ் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் அழகு ஜெயபால், பி.எஸ்.சரவணகுமார், கோஷி பேபி, கார்த்திக் தங்கபாலு, ஊட்டி நாகராஜ் ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ளனர் என்று செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
