வழக்கமான நடைபயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுடைய பயன்பாட்டுக்கு திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஒவ்வொரு நாளும் பம்பரம் போல சுழன்று வருகிறார். அதே நேரத்தில் கட்சி பணியில் கடும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். தன்னுடைய உடல் நலத்தை பாதுகாப்பதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் தவறியது இல்லை.

மக்கள் பணிக்கு இடையே தனக்கு அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும், உடலை உறுதி செய்வதற்காகவும், ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் மு.க.ஸ்டாலின் செலவிட்டு வருகிறார். இதற்காக அவர் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உடற்பயிற்சி செய்வதில் அலாதி பிரியம் உண்டு. உடற்பயிற்சி செய்யும்போது, தன்னுடைய உடல் மற்றும் உள்ளத்தை அதற்கு ஏற்றவாறே மு.க.ஸ்டாலின் மாற்றி அமைத்துக் கொள்வார்.

அப்படித்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கார் ஓட்டுவது பிடிக்கும். அதுமட்டுமல்ல, அந்த காரில் பழைய பாடல்களையும் போட்டு கேட்டபடி செல்வது அவருக்கு பிடித்தமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் தனக்கு பிடித்தமான பியட் பத்மினி காரை அடிக்கடி அவரே ஓட்டி செல்வதுண்டு. ஆனால் கட்சி தலைவர், முதல்வர் என்ற பதவிகள் அவருடன் இணைந்த பிறகு தனது ஆசைகளையும் துறக்க வேண்டியதாயிற்று.

தான் ஆசையாக பயன்படுத்திய அந்த காரை வீட்டிலேயே பாதுகாப்பாக பராமரித்தும் வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் சென்னை அடையாறு பூங்காவில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சி முடித்ததும் தனது கார் ஓட்டும் ஆசையை நிறைவேற்றும் வகையில் பியட் காரை ஓட்டினார். சர்வ சாதாரணமாக காரில் ஏறி, அவரே காரை இயக்கினார். முதல்வருடன் காரின் பின் இருக்கையில் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன் ஆகியோர் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டனர்.

அடையாறில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லம் வரை காரை ஓட்டியபடி சென்றார். வழக்கமாக பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க அதன் நடுவில் சொகுசு காரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பார். அதையே பார்த்து பழக்கப்பட்டவர்கள் நேற்று காலை மிக சிறிய காரில், அதுவும் அவரே ஓட்டி சென்றதை பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ரோட்டோரத்தில் நின்று முதல்வரை பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்தனர். அவரும் பதிலுக்கு கையசைத்தார்.

காரில் இருந்தவர்களிடம் தனது பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே சென்றார். மேலும் ரசித்து காரை முதல்வர் ஓட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் ஓட்டி சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் ஓட்டும் வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நமது அன்புக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர்.

குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைபயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களை அவர் விரும்புகிறார். இன்று அவர் அதைத்தான் செய்தார். இன்று (நேற்று) காலை, அழகான ‘பியட் செலக்ட்’ காரை சாதாரணமாக ஓட்டிச் சென்றார். தலைவருக்கு பியட் கார் என்றால் மிகவும் பிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: