திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித்திலகம் ‘பராசக்தி’: கமல்ஹாசன் பாராட்டு

சென்னை: நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன், ‘பராசக்தி’ படத்தை பார்த்த பிறகு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அன்புள்ள இளவல், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘பராசக்தி’ படத்தை பார்க்க தொடங்கும் முன்பு நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று.

ஆம், இந்தப் படம் வெற்றிபெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, எனது உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித்திலகம். எனது முதல் பாராட்டு, இந்த பயோஃபிக்‌ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும், இக்கதையை தேர்ந்தெடுத்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

இந்த சினிமா சரித்திரத்தில் இணைந்துள்ள ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகிய அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர் சதீஷ் சூர்யா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: