ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக அலுவலகம் வந்த பெண் விரட்டியடிப்பு: எடப்பாடி நேர்காணலின்போது பரபரப்பு

சென்னை: ஜெயலலிதா மகள் என்று கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த பெண்ணை அதிமுகவினர் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் நடந்தது.

நேற்று கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக விருப்ப மனு செய்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நேர்காணல் நடத்தினார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெயலலிதா மகள் என்று கூறிக்கொண்டு ஒரு பெண் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேர்காணலில் பங்கேற்க வந்தார்.

நேரடியாக தனது கார் மூலம் அலுவலக வளாகத்துக்கு வந்த பெண், நான் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மகள் ஜெயலட்சுமி என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். இதனால் உஷாரான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெயலட்சுமியை காரில் இருந்து இறங்க விடாமல் கட்சி அலுவலகத்தில் இருந்து விரட்டி அடித்தனர். அவரை அதிமுகவினர் விரட்டி அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பெண் குறித்து விசாரித்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகள் என கூறிக்கொள்ளும் பிரேமா என்கிற ஜெயலட்சுமி, அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை கடந்த 2023ம் ஆண்டு தொடங்கினார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 23ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் வந்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார்.

நேற்று அதிமுக அலுவலகத்தில் நேர்காணல் நடந்த நிலையில், அதில் பங்கேற்க ஜெயலட்சுமி அதிமுக அலுவலகம் வந்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்ட நிலையில் நேர்காணலுக்கு வந்ததாக அவர் கூறினார். அவரது காரை அலுவலகத்துக்குள் நுழையவிடாமல் அதிமுகவினர் விரட்டி, திருப்பி அனுப்பினார்கள்.

ஜெயலலிதா மகள் என கூறி, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஒரு பெண் வந்ததும், அவரை அதிமுகவினர் விரட்டி அத்த சம்பவமும் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தின் முதல் மாடியில், நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* எடப்பாடி முதல்வரானால் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?
அதிமுகவினரால் விரட்டி அடிக்கப்பட்ட ஜெயலட்சுமி கட்சி அலுவலகத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறும்போது, “ஜெயலலிதாவே கையெழுத்து போட்டு தனக்கு உறுப்பினர் அட்டை கொடுத்துள்ளார். (அதை நிருபர்களிடம் காட்டினார்). எடப்பாடி பழனிசாமி தன்னை ஏன் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்? பெண்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம், பெண்ணாக இருந்தும் என்னை அழைத்து பேசாமல் தன்னை அதிமுகவினர் ஒருமையில் பேசினர்.

எடப்பாடி முதல்வரானால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும். எடப்பாடி யார் காலை பிடித்து முதலமைச்சர் ஆனார் என்ற விவரமும் எனக்கு தெரியும். இதுபோன்ற பல்வேறு ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நேரம் வரும். அதை வெளியிடுவேன். கோகுல இந்திராவும் தன்னுடைய விருப்ப மனுவை வாங்காமல் தன்னை ஏன் புறக்கணித்தார்’’ என்று ஆவேசமாக கூறினார்.

Related Stories: