சென்னை: உறுப்பினர்கள் நியமனத்தில் உரிய விதிகளை கடைபிடிக்காத புகாரையடுத்து தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 பேரை நியமனம் செய்து கடந்தாண்டு நவம்பர் 28ல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் சவுகத் அலி முகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர்கள் நியமனத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சட்ட விதிகளின்படி, வக்பு வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் இரண்டு பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
