முன்னாள் எம்பியும் பிரபல நடிகருமான இன்னசென்ட் மரணம்: நாளை உடல் அடக்கம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இன்னசென்ட் (75). 1972ல் நிருத்தசாலா என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இரகள், நெல்லு, கிலுக்கம் உள்பட 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். மலையாள நடிகர் சங்கத்தில் 15 வருடத்திற்கு மேல் தொடர்ந்து தலைவராகவும் இருந்து உள்ளார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இன்னசென்ட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.45 மணி அளவில் மரணமடைந்தார்.

நடிகர் இன்னசென்டின் மரணத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இன்று கொச்சி மற்றும் சாலக்குடியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நடிகர் இன்னசென்டின் இறுதிச் சடங்கு நாளை அவரது சொந்த ஊரான சாலக்குடியில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

Related Stories: