ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த மாநிலங்களவை  எம்பி சஞ்சய் ராவத். இவர் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களை திருடர்களின்  கும்பல் என்று விமர்சித்ததாக புகார் எழுந்தது். இது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவை உரிமைக்குழு விசாரித்தது.   இந்நிலையில், சஞ்சய் ராவத் போதிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி,  அந்தக்குழு ராவத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது.  இந்த அறிக்கைக்கு சட்டப்பேரவை சபாநாயகர் நர்வேகர் ஒப்புதல் அளித்தார்.  பின்னர் இந்த அறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை, மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதிக்கு மகாராஷ்டிர  சட்டப்பேரவை அனுப்பி வைத்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் எம்பி நேற்று  தெரிவித்ததாவது: ராகுல் காந்தியைப் போல மாநிலங்களவை  உறுப்பினர் பதவியில்  இருந்து என்னை தகுதி நீக்கம் செய்வதற்கு, சதி நடக்கிறது. ஆனால் இதுபோன்ற  செயல்களுக்கு நான் பயப்படவில்லை. நான் ஒருபோதும் மாநில சட்டப் பேரவையை  திருடர்களின் மன்றம் என்று குறிப்பிடவில்லை. ஆனால், உத்தவ் தாக்கரேயின்  தந்தை நிறுவிய சிவசேனா கட்சியையும், அதன் பாரம்பரிய வில் அம்பு  சின்னத்தையும் பறித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியின் 40  எம்எல்ஏக்களை குறித்து தான் தெரிவித்தேன்.  நான் இதுவரையிலும் சொல்லாத கருத்துக்கு மன்னிப்பு கேட்க  மாட்டேன்.  பாஜவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். நான் என்ன விலை  கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவேன் என்றார்.

Related Stories: