வேப்பூர்: தேமுதிக யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்தாச்சு… தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கடலூர் மாநாட்டில் பிரேமலதா பேசி உள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று மதியம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 90 அடி கொடிக்கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து, மாநில பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மாலை பிரசார வாகனத்தில் நின்றபடி 40 நிமிடம் கையசைத்துக் கொண்டு மேடைக்கு பிரேமலதா வந்தார். மாநாடு மேடையில் விஜயகாந்தின் மார்பளவு உலோக சிலையை வைத்து மாலை போடப்பட்டிருந்தது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த் முதலில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நாட்டு மக்களுடைய வாழ்வை கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரமும், இந்த மாநாடு வாயிலாக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அளிக்கப்படுகிறது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து மாநாட்டில் பிரேமலதாபேசியதாவது: தேமுதிக பற்றி இழிவாக யார் பேசினாலும், தேமுதிக தொண்டர்கள் பதிலடி தர தயாராக இருக்கிறார்கள். நாட்டுக்கும், தேசத்திற்கும் உண்மையாக உழைக்கும் கட்சி தேமுதிக. தேர்தல் வந்தால் எவ்வளவு சீட் பேரம் என்கிறீர்களே. நான் பேசுவேன், யாரிடம் பேசுவேன். எங்க மாவட்ட நிர்வாகிகளிடம், தொண்டர்களிடம் பேசுவேன். நாம் யாருடன் கூட்டணி வைக்க வேண்டுமென உங்ககிட்ட பேசுவேன். நீங்கள் யாரை விரல் காட்டுகிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்பதை நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இங்கு மேடையில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்களிடம்தான் நான் பேசுவேன். அவர்கள் ஒப்புதல் இல்லாமல் நான் பேச மாட்டேன். உங்கள் அம்மாவாக இருந்து நான் சொல்கிறேன், பேச மாட்டேன்.
தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக எங்கு கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சியமைக்க முடியும் என்று உறுதியாக சொல்கிறேன். ஏனென்றால் இது சாதி, மத இனத்திற்கு அப்பாற்ப்பட்ட கட்சி. அனைவரையும் சமமாக பார்க்கும் என்பதே நமது இறுதி கொள்கை. தேமுதிகவுக்கு இனி வெற்றி ஒன்றுதான் கொள்கை. மாவட்ட செயலாளர்கள் கூட்டணி தொடர்பாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். யார், யாருடன் கூட்டணி வைக்கலாம் என அவர்கள் எழுதி கொடுத்ததை நான் மட்டுமே பார்த்தேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டாச்சு. ஆனால் இந்த மாநாட்டில் அதை அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி. நான் ஏன் இதை சொல்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றுவரை தமிழகத்தில் எந்த கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. நாமும் நன்கு ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். நான் கடைகோடி தொண்டர்களை பார்த்து கேட்கிறேன். இந்த மேடையில் நாம் அறிவிக்க வேண்டுமா?. நாம் இவ்வளவு நாளாக சத்ரியனாக வாழ்ந்து விட்டோம், இனி சாமர்த்தியமாக வாழ வேண்டும். நாம் நின்று யோசித்து அடிப்போம். தேமுதிக சாதாரண கட்சி இல்லை. நமக்கென்று ஒரு மரியாதை, கண்ணியம் உண்டு. அதையெல்லாம் யார் மதிக்கிறார்களோ, என் தொண்டர்களை யார் மதிக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி. நமக்குரிய இடங்கள், தொகுதிகளை உரிய முறையில் பெற்று கடைகோடி தொண்டன் தலைநிமிர்ந்து நிற்கும் அளவில் கூட்டணி அமைப்போம். நமது முரசு எட்டுதிக்கும் வெற்றி முரசு. இவ்வாறு அவர் பேசினார்.
* சாய்ந்து விழுந்த மின்விளக்கு கம்பத்தால் பரபரப்பு
மாநாட்டு மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். எனினும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அந்த மின்விளக்கு கம்பத்தை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
* காங்கிரஸை நம்பாதீங்க விஜய் ப்ரோ.. விஜய பிரபாகரன் அட்வைஸ்
தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன் பேசுகையில், ‘தேமுதிகவுக்கு என்ன கொள்கை இருக்கு? என்று எல்லோரும் கேட்கிறார்கள். லஞ்சம், ஊழலை ஒழிக்கும் ஒரே கொள்கை கொண்ட இயக்கம் தேமுதிகதான். நமது கொள்கை, கோட்பாடுகள் கேப்டன். இதில் எல்லா கொள்கையும் அடங்கியுள்ளது. கேப்டன் என்ற ஒரு சொல்லுக்காகத்தான் இன்று இத்தனை பேர் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தேமுதிக என்னவென்று புரியணும். கூட்டணி முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். கூட்டணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றாக செயல்படணும். ஜனநாயகன் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் உங்களுக்கு அட்வெஸ் செய்யுறாங்க. அவர்களை நம்பாதீங்க. எனக்கு எம்பி தேர்தலில் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள். அவர்களை மட்டும் நம்பாதே ப்ரோ. இதை வைத்து கூட்டணி பேச கூட வாய்ப்பு இருக்கிறது. நம்பிடாதீங்க ப்ரோ’ என்றார்.
