சேலம்: ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வரும் கழகத்தை உடைக்க மகன் தயாராக இருக்கிறார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் சேர தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானவுடன் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். டி.டி.வி தினகரனோ, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் சசிகலாவோ அதிமுகவை ஒருங்கிணைப்பேன், நான் தான் அதிமுக பொதுச்செயலாளர் என அவரது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறார்.
இவர்கள் 3 பேரும் எப்படியாவது அதிமுகவில் சேர்ந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்த்து விடுவதாக பாஜக உறுதி கூறியது. இதனை நம்பிய ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி, தேனியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்நிலையில், அதிமுக கட்சி விவகாரத்தில் இனிமேல் தலையிட மாட்டோம் எனக் கூறி பாஜ ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டன் வழக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் தினகரன், பாஜக மிரட்டலுக்கு பயந்துபோய் தற்போது வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.
இவரை அதிமுக கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி பழனிசாமி சூசகமாக சம்மதம் தெரிவித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்கவே மாட்டோம் என உறுதியாக கூறிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் எங்கு போவது என்பது தெரியாமல் தவிக்கிறார். அவரது மகனும் முன்னாள் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத், நடிகர் கட்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். ஏற்கனவே அந்த கட்சியின் கூட்டங்களை நடத்த நிதி உதவி வழங்கி வருகிறார். இந்த இக்கட்டான நிலையில் வருகிற 17ம் தேதி(சனிக்கிழமை) முடிவை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் அன்று நல்ல முடிவை அறிவிக்காவிட்டால் தந்தை நடத்தி வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகத்தை உடைத்து விட்டு ஆதரவாளர்களுடன் வெளியேறி, நடிகர் கட்சியில் சேருவேன் என கூறி வருகிறார். 3 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துவிட்டு, நேற்று தொடங்கிய நடிகர் கட்சியில் போய் சீட் கேட்டு போட்டியிடுவதா? என்று ஓ.பன்னீர்செல்வம் தவித்து வருகிறாராம். அதேநேரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணியில் சேர வேண்டாம் என கூறி வருகின்றனர். ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சசிகலாவின் ஆதரவில் தான் தினகரன் அதிமுகவில் பொறுப்புக்கு வந்தார். சசிகலாவுக்கு பிறகு தற்போது தினகரன் பின்னால் தாங்கள் இருக்கும் நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டதால் அவருக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் எனவும், தனியாக நின்று தங்களின் பலத்தை காட்டவேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.
