ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: ராகுல் விஷயத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைவதால், கெஜ்ரிவாலின் கருத்தால் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், ராகுல்காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் - ஆம்ஆத்மி கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தேசிய தலைமை அளவில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது, மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் காங்கிரஸின் மத்திய தலைமை அமைதியாக இருந்தது. அதேநேரத்தில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் தான் மணீஷ் சிசோடியாவின் வழக்கறிஞர்களாக உள்ளனர்.

எனவே பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மியும், காங்கிரசும் ஓரணியில் நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’ என்றார்.

Related Stories: