மதுரை விமான நிலையத்தில், ஏப்.1 முதல் 24 மணி நேர சேவை: நிலைய இயக்குனர் தகவல்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் ஏப்.1ம் தேதி 24 மணி நேர சேவை தொடங்கும் என நிலைய இயக்குநர் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், விரிவாக்க பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நிலைய இயக்குநர் கணேசன் நேற்று கூறியதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி ரூ.110 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவடையும்.

ஓடுபாதை விரிவாக பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டதில் 2 சதவீதம் நிலம் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. எனவே அந்த இடத்தில் பணிகள் மேற்கொள்ளும் ஒப்புதலுக்காக தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் அப்பகுதியில் ஓடுபாதை அமைக்கும் பணி விரைவில் துவங்கும். இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் வரும் ஏப்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்படவுள்ளது. இதற்காக புதிய விமான சேவைகள் கொண்டு வரவும், கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: