ராகுல் காந்தி தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட பெரிய சவால்: திருச்சி சிவா எம்பி பேச்சு

அம்பத்தூர்: சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே அலைபோல் உழைப்பு, மலைபோல் உயர்வு எனும் தலைப்பில் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருச்சி சிவா எம்பி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, நாஞ்சில் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.  பின்னர், அங்கு நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் திருச்சி சிவா எம்பி பேசியதாவது:ராகுல் காந்தி நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்துக்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில், அவருக்கு இந்த தண்டனையை ஒன்றிய பாஜ பெற்று தந்துள்ளது.  ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கில் சட்டத்துக்கேற்ப 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தில் 2 ஆண்டு தண்டனை விதித்தால் தகுதி இழப்பு வரும் என்றிருந்தாலும், கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தாலும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனினும், அதற்குள் ராகுல்காந்தியை நாடாளுமன்ற செயலாளர் தகுதிநீக்கம் செய்துள்ளார். இவ்வழக்கில் இன்னும் பல படிகளை கடந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.  இது, ஜனநாயகத்துக்கு விடப்பட்ட பெரிய சவால். ராகுல் காந்தியை பார்த்து ஒன்றிய பாஜ அஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் காத்திருந்தால், நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: