காங்கிரசிடம் உஷாராக இருக்க வேண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி கர்நாடகாவிற்கு தேவை: பிரதமர் மோடி பேச்சு

சிக்கபள்ளாபுரா: காங்கிரஸ் கட்சியிடம் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தாவணகெரேவில் நடந்த விஜய்சங்கல் யாத்திரை நிறைவு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது பேசியதாவது: வேகமான வளர்ச்சி என்பது காலத்தின் தேவை எனவே சூழ்ச்சி அரசியலில்  இருந்து மாநிலத்தை வெளியே கொண்டு வர கர்நாடக மக்கள் உதவ வேண்டும். ஏனெனில் கர்நாடகாவை வளர்ச்சியடைந்த இந்தியாவின் உந்து சக்தியாக மாற்ற பாஜ விரும்புகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் அதை தலைவர்களின் கருவூலத்தை நிரப்பும் ஏடிஎம் என்று கருதுகிறது.

கர்நாடகா நீண்ட காலமாக சந்தர்ப்பவாத மற்றும் சுயநல கூட்டணி ஆட்சிகளை கண்டுள்ளது. இதுபோன்ற அரசுகளால் கர்நாடகா நஷ்டத்தை சந்தித்துள்ளது. எனவே, கர்நாடகாவின் வேகமான வளர்ச்சிக்கு, பாஜ முழு பெரும்பான்மை பெற்று நிலையான ஆட்சி அமைக்க வேண்டும். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ ஆட்சியுள்ள இரட்டை என்ஜின் ஆட்சி கர்நாடகாவிற்கு தேவை. யாருக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காதபோது, ​​கர்நாடகா மோசமான நிலையில் இருக்குமா, இல்லையா? வலுவான நிலையான ஆட்சி வேண்டுமா, வேண்டாமா? முழு பெரும்பான்மை உள்ள ஆட்சி வேண்டுமா, வேண்டாமா?.

சூழ்ச்சி அரசியலில் இருந்து கர்நாடகாவை வெளியில் கொண்டு வந்து, வேகமாக முன்னெடுத்துச் செல்வதே முதல் வேலையாக இருக்க வேண்டும். நான் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும், உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றால், கர்நாடகாவில் பாஜவின் வலுவான ஆட்சி எனக்குத் தேவைப்படும். நீங்கள் பாஜவை வெற்றிபெறச் செய்து அதன் வலுவான ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரசை நம்பலாமா? அவர்களை கர்நாடகாவிற்குள் அடியெடுத்து வைக்க அவமதிக்க வேண்டுமா அல்லது அவர்களை தூக்கி எறிய வேண்டுமா?. காங்கிரஸ் கட்சியிடம் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் விளையாட்டை விளையாட வாய்ப்பளிக்கக் கூடாது. நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் காங்கிரசிடம் எந்த சாதகமான செயல்திட்டமும் இல்லை. அவர்கள் என்னிடம், மோடி, உங்கள் கல்லறை தோண்டப்படும் என்கிறார்கள். ஆனால், கர்நாடக மக்கள் மோடி , உங்கள் தாமரை மலரும்  என்று கூறுவது அவர்களுக்குத் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: