லண்டனில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடி? டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன் போடப்பட்ட தடுப்புகள் அகற்றம்

புதுடெல்லி: டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் நேற்று திடீரென அகற்றப்பட்டன. இது லண்டனில் இந்திய தூதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தியாவில் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பினர் மற்றும் அதன் தலைவர் அம்ரித் பால் சிங் மீது பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராகவும் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். பின்னர், அங்கிருந்த இந்திய தேசியக்கொடியை கீழே இறக்கி விட்டு, காலிஸ்தான் கொடியை பறக்க விட்டனர்.

டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரை அழைத்து இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியாவிடம், உரிய பாதுகாப்பு அளிப்பதாக இங்கிலாந்து அரசு உறுதி அளித்தது. இந்த நிலையில், லண்டனில் இந்திய தூதரகத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்காததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக பாதுகாப்புக்காக அதன் முன்பு அமைக்கப்பட்டிருந்த கூடுதல் தடுப்புகளை டெல்லி போலீசார் நேற்று அகற்றினர்.  

இதற்கிடையே, இங்கிலாந்தில் செயல்படும் பிரிட்டிஷ் சீக்கிய அமைப்பினர், பஞ்சாப் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் இந்திய தூதரகம் முன்பு  போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை போதிய பாதுகாப்பு அளிக்காமல் தூதரகம் தாக்கப்பட்ட  நிலையில், தற்போது அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: