தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய திட்டம் இல்லை: எடப்பாடி பேட்டி

சென்னை: தலைமைச்செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் மானிய கோரிக்கையில் என்னென்ன இடம்பெற்றுள்ளதோ அதேதான் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. நீர்நிலைகளை பாதுகாக்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டுள்ளனர். அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை பற்றி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தமிழ்நாடு விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகள் பயன் அடையும் வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு நன்மையும் இடம் பெறவில்லை. பெரிய திட்டங்கள் எதையும் விவசாயிகளுக்காக அறிவிக்கவில்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதுதொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: