ஒடுகத்தூர் அருகே தர்மகொண்டராஜா கோயில் அருகில் தண்ணீருக்காக சுற்றித்திரியும் காட்டெருமைகள்: வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கை

ஒடுகத்தூர்:  ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் அருகே உள்ள பாலபாடி காட்டு பகுதியில் தர்மகொண்டராஜா பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, வாரம் தோறும் சனிக்கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனால், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இங்கு கோயிலுக்கு சொந்தமாக குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் இதுவரை வற்றியதே கிடையாதாம். அதேபோல், கடும் கோடை காலத்திலும் சுற்றியுள்ள கிணறுகள், ஏரிகள் கூட தண்ணீரின்றி வற்றி விடுமாம். ஆனால், இந்த குளம் எந்த காலத்திலும் வற்றாததால் இதனை அதிசய குளம் என்று கூட அழைப்பார்கள்.

இந்த கோயில் காட்டுக்கு நடுவே அமைந்துள்ளதால் இங்குள்ள கோயில் குளத்திற்கு தண்ணீர் குடிக்க இரவு, பகல் நேரங்களில் மான், மயில், காட்டு பன்றிகள் போன்ற காட்டு விலங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றன. இப்போது, கோடை காலம் தொடங்கியுள்ளதால் தற்போது காட்டெருமைகள் கூட்டமும் கோயில் அருகே வலம் வந்து கொண்டுள்ளது. இரவு நேரங்களில் வரும் காட்டெருமைகள் இப்போது பகல் நேரங்களிலேயே வர தொடங்கி விட்டது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றித்திரியும் காட்டெருமைகளால் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இந்த காட்டெருமை கூட்டத்தால் பொதுமக்களுக்கு எப்போதாவது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதற்கு முன் இக்கோயிலில் ஒற்றை கொம்பு காட்டு யானை வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் கோயில் அருகே சுற்றித்திரியும் காட்டெருமை கூட்டத்தை தடுக்க, வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்க கோடைக்காலத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: