பால் கொள்முதல் விலை: தலைவர்கள் அறிக்கை

சென்னை: பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கட்சித்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி: பால் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 25 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. அந்தவகையில், ஆவின் நிறுவனத்திற்கு உற்பத்தியாளர்கள் பால் வழங்குவதை நிறுத்தி விட்டால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்.

தமிழ்நாட்டில் ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.12 முதல் ரூ.26 வரை அதிகமாக உள்ளது. ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.26 வரை அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஆவின் பாலின் சந்தைப் பங்கு இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு, தனியார் பால் வினியோகம் அதிகரிக்கப்படாவிட்டால் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். இந்த நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுவதற்கு உதவ வேண்டும். பால் உற்பத்தியாளர்களும் பால் நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, தமிழ்நாடு அரசுடன் பேசி கோரிக்கைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும்.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று (நேற்று) முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கிராம சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு பால் வழங்குவது நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சாதாரண மக்கள் தான் ஆவின் பாலை பெருமளவு வாங்கி பயன்படுத்துவதால், அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும். பால் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்னையை தீர்த்து, பால் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு, தாமதமில்லாமல், நுகர்வோருக்கு, பொதுமக்களுக்கு தடையில்லா ஆவின் பால் விற்பனை செய்யப்பட வேண்டும்.

Related Stories: