இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு: ஒருமனதாக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி; ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனால், அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது.  

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ம்தேதி பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி  பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மேலும், அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி, சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பொதுச் செயலாளர் தேர்தல் பற்றி எடப்பாடி தரப்பு ஆலோசனை நடத்தினர். அதன்படி, விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது என்றும் அதில் பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதலை பெறுவதற்காக மீண்டும் ஒரு பொதுக்குழுவையும் கூட்டுவது என்றும் திட்டமிட்டனர். முன்னதாக, ஓபிஎஸ் படங்களுடன் கூடிய உறுப்பினர் அட்டைகளுக்கு பதிலாக புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டதால், கட்சி அறிக்கை, கட்சி அலுவலகங்கள், தலைமை அலுவலக பேனர் உள்பட அனைத்து இடங்களிலும் ஓபிஎஸ் படங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணித்து விட்டனர்.

எனவே, புதிதாக அச்சடிக்கப்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகளில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் படம் இல்லாமல், லட்சக்கணக்கான உறுப்பினர் அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டு கட்சி அலுவலகத்தில் 2 அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இவை மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக எடப்பாடி தரப்பு உரிய பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை வரும் ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு அதிரடியாக வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற உள்ளது என அதிமுக தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சட்ட திட்ட விதி: 20 (அ); பிரிவு-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ‘கழகப் பொதுச் செயலாளர்’ கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப “கழகப் பொதுச் செயலாளர்’’ பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும். இன்று (18ம் தேதி) சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதன்படி, பிற்பகல் 3 மணிக்குள்ளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று, வரும் திங்கட்கிழமை (20ம் தேதி) வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.

செவ்வாய்க்கிழமை (21ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு திரும்ப பெறலாம். அதை தொடர்ந்து வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வருகிற 27ம் தேதி திங்கட்கிழமை 9 மணி முதல் எண்ணப்படும். ‘கழகப் பொதுச் செயலாளர்’ பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் கட்சி உடன்பிறப்புகள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமை அலுவலகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கட்சியின் சட்ட விதி- 20அ; பிரிவு - 1,(a),(b),(c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் வழங்கலாம். ‘கழகப் பொதுச் செயலாளர்’ பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கட்சியின் உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த அறிவிப்பு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, டெல்லியின் அதிகார மட்டம் தன்னை கைவிட்டு விட்டதாக ஓ.பன்னீர்செல்வவம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எழுச்சி பெற வேண்டுமெனில் அதிமுகவில் சிதறுண்டு கிடக்கும் தலைவர்களின் ஆதரவை பாஜ பெற வேண்டியது அவசியம். இந்த சூழலில் பாஜ மேலிடம் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் என்ன செய்யப் போகிறது, அவரது சட்டப் போராட்டத்தில் வெற்றி கிடைக்குமா என்பது உள்ளிட்டவை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலையில் மனு அளித்துள்ளார். அதில், மார்ச் 26ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. எனவே கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில், கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள், குண்டர்களால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே நாளை முதல் வரும் 27ம் தேதி வரை கட்சி தலைமையகத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.

Related Stories: