15 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் சென்னை - ஐதராபாத் ரயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும்

நாகர்கோவில், மே 15: சென்னை - ஐதராபாத் ரயிலை குமரி வரை நீட்டித்தால் 15 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து தெலுங்கானாவின் தலைநகரான  ஐதராபாத்துக்கு செல்ல நேரடி தினசரி ரயில் வசதி இல்லை. கன்னியாகுமரி, நெல்லை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஐதராபாத்துக்கு வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தமாக சென்று வருகிறார்கள்.  நேரடி தினசரி ரயில் வசதி இல்லாததால் சென்னை சென்று, அங்கிருந்து தான் ஐதராபாத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. நாகர்கோவிலில் இருந்து மதுரை, நாமக்கல், திருப்பதி வழியாக கச்சுகுடாவிற்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 1,496 கி.மீ தூரத்தை கடக்க பயண நேரமாக 30 மணி நேரம் எடுத்து கொள்கிறது. இது மற்ற ரயில்களை காட்டிலும் அதிக பயண நேரம் ஆகும். இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் விரும்புவதில்லை.

சென்னையில் இருந்து  ஐதராபாத்துக்கு தினசரி மூன்று ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த மூன்று ரயிலில் ஏதாவது ஒரு ரெயிலை குறிப்பாக சென்னை - ஐதராபாத் (வண்டி எண் - 12603/12604)  ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பது  தென் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் இதுவரை நிறைவேற்றவில்லை.  இந்த வழிதடத்தில் ரயில் இயக்கினால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 15 மாவட்ட பயணிகள் நேரடியாக பயன் பெறுவார்கள் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ராம் கூறினார்.

இது தொடர்பாக அவர் ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு செல்லும் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்கும் பட்சத்தில் குமரி மாவட்ட பயணிகளுக்கு சென்னை, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல கூடுதலாக  ஒரு தினசரி ரயில் வசதி கிடைக்கும்.

இந்த வழி தடத்தில்  கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி மலைகோட்டை போன்ற தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய அனைத்து ரயில்களும் சென்னை சென்ட்ரலுடன் நிறுத்தப்படுகிறது. தற்போது சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை உள்ள பாதை இரட்டை பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில்களை தென் மாவட்டங்களுக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். அந்த வகையில் சென்னை - ஐதராபாத் ரயிலையும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories: