இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் ரஷ்யாவின் வர்வரா கிரசேவாவுடன் (22 வயது, 66வது ரேங்க்) மோதிய ரைபாகினா (23 வயது, 10வது ரேங்க்) 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரைபாகினா ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கஜகஸ்தான் குடியுரிமை பெற்று விளையாடி வருகிறார். நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) தனது 4வது சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை (20 வயது, 77வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்தது. 5ம் நிலை வீராங்கனை கரோலின் கார்சியா (29 வயது, பிரான்ஸ்) 4வது சுற்றில் ருமேனியாவின் சொரானா கிறிஸ்தேயாவிடம் (32 வயது, 83வது ரேங்க்) 2 மணி, 23 நிமிடம் போராடி 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
